சாலையோரத்தில் நின்றிருந்த மாணவனின் செல்போன் பறிப்பு : பைக்கில் வந்த 3 பேர் சிக்கினர்!!

2 November 2020, 4:57 pm
Callphone Theft - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தென்தாமரைகுளத்தில் ரோட்டில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவனின் செல்போனை பைக்கில் வந்து பறித்து சென்ற சம்பவத்தில் 3 பேரை தென்தாமரைகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் ஐசக் ஞானஜெபா (வயது 48). இவரது மகன் ஜெப்ரி(வயது 18). கல்லூரி மாணவர். ஜெப்ரி நேற்று காலை தென்தாமரைகுளம் வங்கி அருகில் ரோட்டில் நின்று செல்போனில் தன்னுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு பைக் வந்துள்ளது. அந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் ஜெப்ரியின் கையிலிருந்த ரூ 20,000 மதிப்புள்ள செல்போனை பறித்து சென்று விட்டனர். உடனடியாக ஜெப்ரி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார்.

அதற்குள் பைக்கில் வந்த மர்மநபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து ஜெப்ரி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி வழக்கு பதிவு செய்தார்.

சப் இன்ஸ்பெக்டர் தவசிலிங்கம் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவு எண் இல்லாத ஒரே பைக்கில் மூன்று நபர்கள் வருவதும், பைக்கை ஓட்டி வந்தவர் ஹெல்மெட் அணிந்திருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் பைக்கில் வந்த மூன்று பேரும் கன்னியாகுமரி அருகில் உள்ள லீபுரத்தை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் லீபுரத்திற்கு விரைந்து சென்று, பதுங்கி இருந்த ஜோனிஷ் (வயது 20), ராபர்ட் சிங் (வயது 20), அசோக் (வயது 21) ஆகிய மூன்று பேர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை தென்தாமரைகுளம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவனிடம் மர்ம நபர்கள் பைக்கில் வந்து செல்போனை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 22

0

0