சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பு சர்ச்சை: மாணவர்கள் அளித்த பரபரப்பு விளக்கம்..தொடரும் விசாரணை..!!

Author: Rajesh
2 May 2022, 1:22 pm
Quick Share

‘முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான சரக ஷபாத் உறுதிமொழியை ஆங்கிலத்தில்தான் வாசித்தோமே தவிர சமஸ்கிருதத்தில் அல்ல’ என்று மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவர் ஜோதிஷ் குமாரவேல் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 30ம் நாள் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் சமஸ்கிருத சரக ஷபாத் உறுதிமொழி எடுத்துக் கொண்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்னவேலை, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் அக்கல்லூரியின் மாணவர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தனர். அதில் பேசிய சங்கத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், ‘சரக ஷபாத்தில் உள்ளவற்றை அப்படியே சமஸ்கிருதத்தில் நாங்கள் வாசிக்கவில்லை.

அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தே நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். நாங்கள் வாசித்தது ஆங்கில மொழியாக்கம்தானே தவிர, நேரடி சமஸ்கிருத மொழி அல்ல.

கடந்த 2019ம் ஆண்டிலிருந்து தேசிய மருத்துவக் கழகம் அளித்துள்ள பரிந்துரையைத்தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். புதிதாக மருத்துவக்கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கான உறுதிமொழி என்று சரக ஷபாத்தைத்தான் தேசிய மருத்துவக் கழகம் பரிந்துரைக்கிறது. அதனையும் அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

ஹிப்போகிராட் உறுதிமொழிதான் கட்டாயம் என வலியுறுத்தவுமில்லை. அதே நேரம் சரக ஷபாத் உறுதிமொழியை எடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தவில்லை. இதற்கிடையே நேற்று பிற்பகல்தான் ஹிப்போகிராட் உறுதிமொழி எடுப்பது குறித்து எங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளும் ஹிப்போகிராட் உறுதிமொழிதான் எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சரக் ஷபாத் உறுதிமொழி கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

Views: - 853

0

0