இளைஞர் கொலை வழக்கில் அடுத்தடுத்து அதிரடி : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!!

21 September 2020, 2:25 pm
Tuticorin Youth Murder- updatenews360
Quick Share

தூத்துக்குடி : தட்டார்மடத்தில் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்படு படுகொலை செய்யப்பட்டார்.

இந்தநிலையில் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், அதிமுகவில் இருந்த திருமணவேல் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர்தான் காரணம் என புகார் அளித்திருந்தார். மேலும் நிலத்தகராறு காரணமாக தொடர்ந்து எனது 3 மகன்கள் மீது பல்வேறு பொய் புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த காவல்துறையினர், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஹிரிகிருஷ்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த டிஜிபி, வழக்கை சிபிசிடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதனிடையே அதிமுக பிரமுகரான திருமணவேல் என்பவரை கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது.

ஏற்கனவே சாத்தான்குளத்தில் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு சம்பவம் தொடர்பான காயங்கள் மக்கள் மனதில் ஆறாத நிலையில் மீண்டும் சாத்தான்குளம் அருகே இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.