ஈரோட்டில் ராகுல்காந்தியின் மொழி பெயர்ப்பாளருக்கு திடீர் மயக்கம் : பிரச்சாரத்தில் பரபரப்பு!!
24 January 2021, 9:53 pmஈரோடு : ராகுல்காந்தியின் மொழிப்பெயர்ப்பாளர் தீடீரென மயக்கமடைந்து கீழே விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் வணக்கம் தமிழகம் என்ற பெயரில் மூன்று நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் நாளான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ராகுல் காந்தி,இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினரால் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஓடாநிலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்நிகழ்ச்சியிக்கு ராகுல் காந்திக்கு முகமது இம்ரான் என்பவர் மொழிபெயர்ப்பு செய்து வந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி நிறைவடையும் நிலையில் முகமது இம்ரான் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து ராகுல் காந்தியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உதவியுடன் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரச்சலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0