பல மாவட்டங்களில் திடீர் மின்தடை…நீடிக்கும் மின்வெட்டால் இருளில் மூழ்கிய கிராமங்கள்: பொதுமக்கள் கடும் அவதி..!!

Author: Rajesh
20 April 2022, 10:51 pm
Quick Share

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் திடீர் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இரவு 8 மணியிலிருந்து மின்வெட்டு நிலவி வருகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிகுப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு 8 மணியில் இருந்து மின்சாரம் நிறுத்தப்படுள்ளது. காரைக்குடி ,தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டுள்ளது.

கரூர், புலியூர், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 45 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு பின்னர் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சேவுர், குன்னத்தூர், கண்ணமங்கலம், களம்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 2 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதேபோல வந்தவாசி, செய்யார், போளூர் ஆகிய பகுதிகளிலும் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோணம், பார்வதிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2 மணி நேரமாக மின் வெட்டு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

குறிப்பாக வெயில் சுட்டெரித்து வரும் கோடை காலத்தில், இதுபோன்ற மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் வெப்பத்தை தாங்க முடியாமல் திண்டாடினர். ஒரு சில இடங்களில் 2 மணி நேரத்தில் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டாலும், பல இடங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நீடித்து வருகிறது. இதனால், மக்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.

Views: - 662

0

0