கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் இனிப்பு : 5 வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் நவீன இயந்திரம்!!
17 September 2020, 3:49 pmஅரியலூர் : ஐந்து வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் நவீன கரும்பு நடவு இயந்திரம் அறிமுகமாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சுமார் பத்தாயிரம் ஹெக்டர் பரப்பளவில் கரும்பு சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கரும்பு ஆராய்ச்சி கழகத்தால் வடிவமைக்கப்பட்ட நவீன கரும்பு நடவு செய்யும் இயந்திரம் தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு அறிமுகபடுத்தபட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விவசாயிகளுக்கான செயல்முறை விளக்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலை சார்பில் அருங்கால் கிராமத்தில் நடைபெற்றது. இந்த இயந்திரத்தின் மூலம் முழுக்கரும்பை கரணையாக வெட்டுதல், கரும்பு நடவு செய்தல், பார் அணைத்தல், உரமிடுதல் மற்றும் பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட ஐந்து வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கான பணவிரயம் மற்றும் கால விரயம் பெருமளவில் குறையும். இந்த இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் இயந்திரம் தேவைப்படுவோர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த செயல்முறை விளக்கத்தில் வேளாண்மை துறை அதிகாரிகள், கோத்தாரி சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். விவசாயத்தில் புதிய யுக்கிகளை கையாண்டு கரும்பை போலவே கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையும் இனிக்கட்டும்.
0
0