கரு பாதிப்பு இல்லாமல் கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை : கோவை அரசு மருத்துவமனை சாதனை

23 September 2020, 3:45 pm
CBE GH - updatenews360
Quick Share

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சமயத்திலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு லேப்ரோஸ்கோப்பி மூலம் பித்தப்பை நீக்க அறுவை செய்யப்பட்டது

இதுகுறித்து மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறுகையில், திருப்பூரைச் சேர்ந்த 29 வயதுடைய 5 மாத கர்ப்பிணி, கடந்த 1 மாதமாக வயிற்று வலியினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் செப்டம்பர் 7ம் தேதி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு செய்யப்பட்ட ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.சி.பி எனப்படும் பரிசோதனையில் பித்தப்பையில் கல் இருப்பதும் அதனால் பித்தப்பை வீக்கம் அடைந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

மேற்கொண்டு இதுபற்றி குடல் மற்றும் இரைப்பை அறுவை நிபுணர்களிடம் கலந்தாலோசனை செய்து, லேப்ரோஸ்கோப்பி மூலம் பித்தப்பை அகற்றம் செய்யப்பட்டது.

கரு பாதிக்கப்படாமல் மேற்படி அறுவை நடந்து முடிந்தது. இந்த அறுவை சிகிச்சையை பேராசிரியர் மனோன்மணி தலைமையிலான மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவக்குழு, பேராசிரியர் துரைராஜன் தலைமையிலான குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைக்குழு மற்றும் பேராசிரியர் ஜெய்சங்கர் நாராயணன் தலைமையிலான மயக்கவியல் குழு என மூன்று குழுக்கள் ஒருங்கிணைந்து அறுவை சிகிச்சை செய்து முடித்தனர்.

அறுவைக்குப் பின்னரும் கருவைப் பாதுகாக்க மருந்துகள் வழங்கப்பட்டன. கர்ப்ப காலத்தில் இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்வது அரிது. கர்ப்பிணித் தாயும் குடும்பத்தினரும் மன நிம்மதியுடன் வீடு திரும்பினர். கொரோனா தொற்று பரவும் இவ்வேளையில் இத்தகைய ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0