மனைவியை கொன்றுவிட்டு தானும் தூக்கில் தொங்கிய கணவர்…! பார்க்க ஆளில்லாமல் நிற்கதியான குழந்தைகள்..!

22 September 2020, 9:57 pm
Quick Share

கன்னியாகுமரி: குருந்தன்கோடு பகுதியில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த தென்னை ஏறும் தொழிலாளி மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். தென்னை ஏறும் தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவருக்கும் கடந்த 2009-ல் திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு 11-வயதில் ராகுல் என்ற மகனும், 10-வயதில் தனுசியா என்ற மகளும் உள்ளனர். ராஜசேகர் குடி பழக்கத்திற்கு அடிமை ஆன நிலையில், அந்த குடும்பம் வறுமையில் வாடி வந்ததாக தெரிகிறது. சிறிய வாடகை வீட்டில் இருக்கும் நிலையில் கணவரின் வருமானம் கைகொடுக்காத நிலையில் தங்கம் அருகில் உள்ள முந்திரி ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இவர் ஆலைக்கு வேலைக்கு செல்ல தொடங்கியது முதலே மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த ராஜசேகர் மது போதையில் மனைவி தங்கத்தை அடிக்கடி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று தங்கம் ஆலைக்கு சென்று மாலை வீடு திரும்பிய நிலையில் ராஜசேகர் மனைவீயிடம் இனி வேலைக்கு செல்லக்கூடாது என தகறாறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இரவு குழந்தைகள் இரண்டு பேரையும் தனி அறையில் தூங்க வைத்த ராஜசேகர் மற்றொரு அறையில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மனைவி தங்கத்தை தேங்காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் தங்கம் இரத்த வெள்ளத்தில் கட்டிலிலேயே உயிரிழந்த நிலையில் ராஜசேகர் வெளியே வந்து வீட்டு வராந்தா உத்திரத்தில் நைலான் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் அவர்களது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 7

0

0