மாட்டிவிட்ட மீசை…வழக்கறிஞருக்கு வைரக்கம்மல்: தி.நகர் நகைக்கடை கொள்ளையன் ‘பின்னணி’…!!

3 November 2020, 2:00 pm
kollai 3 - updatenews360
Quick Share

தியாகராய நகர் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட மார்க்கெட் சுரேஷ் பிடிபட அவரது மீசையே காரணமாக அமைந்துள்ளது.

சென்னை தியாகராயர் நகரில் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 21ம் தேதி 2.5 கிலோ தங்கம் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், மார்க்கெட் சுரேஷ் என்பவன் தலைமையிலான கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், 1.5 கிலோ தங்க நகைகளையும், 11 கிலோ வெள்ளியையும் மீட்டுள்ளனர்.

விசாரணையில் கொள்ளையன் சுரேஷ் சென்னையில் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. கொள்ளையன் சுரேஷ் திருட்டில் ஈடுபடும் போது, தொப்பி போட்டுக்கொண்டு, முகத்தில் மாஸ்க், கிளவுஸ் என முகம் தெரியாத அளவிற்கு மறைத்து கொண்டு திருட்டில் ஈடுபடுவாராம். இதனால் பல இடங்களில் கைரேகை குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொள்ளை சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி கேமரா பதிவில், கொள்ளையனின் மீசை மட்டும் தெரியும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த அடர்த்தி மீசையையே ஒரு துப்பாக வைத்து கொண்டு, பழைய குற்றவாளிகளில் யாருக்கெல்லாம் அடர்த்தி மீசை இருக்கறது என்று போலீசார் ஆராய்ந்தனர். மேலும் பல சிசிடிவி காட்சிகளிலும் பதிவான திருடர்களின் மீசைகளையும் ஒப்பிட்டு பார்த்தனர். அப்படி ஒத்துப்போனதுதான் மார்க்கெட் சுரேஷின் மீசை. அதன்பிறகுதான் சுரேஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுரேஷூக்கு கங்கா என்ற பெண் தோழியுடன் தொடர்பில் இருந்துள்ளான். 2 பேரும் சேர்ந்து திருட்டில் பலமுறை ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவள்ளூரில் பதுங்கி கிடந்த கங்காவை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் திநகரில் கொள்ளையடித்த நகையின் ஒரு பகுதியை கங்காவுக்கு சுரேஷ் தந்தது தெரியவந்தது. கங்காவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கியவர்தான் அப்பு என்கிற வெங்கடேசன்.

இதுமட்டுமல்லாமல், என்றைக்காவது தான் போலீசில் மாட்டிக்கொண்டால், தன்னை ஜாமினில் எடுக்கும்படி வழக்கறிஞர் ஒருவருக்கு வைரக்கம்மலை முன்கூட்டியே கொடுத்துள்ளார் மார்க்கெட் சுரேஷ். இதனையடுத்து அந்த வக்கீலையும் பிடித்து, வைரக்கம்மலையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 49

0

0