50 பைசாவுக்கு டி-சர்ட் விற்பனை.. குவிந்த வாடிக்கையாளர்கள் : ‘லாக் டவுன்’ கடையை திறந்த முதல் நாளே ‘லாக்’!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 4:58 pm
Lock For Lockdown Shop -Updatenews360
Quick Share

திருச்சி : 50பைசாவுக்கு டி-சர்ட் விற்பனை செய்யததால் பொதுமக்கள் கூட்டமாக கூடி டிசர்ட் வாங்க முண்டியடித்தால் காவல்துறையினர் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகேயுள்ள சின்னக்கடை வீதியில் புதிதாக ஆண்களுக்கான “லாக் டவுன்” என்ற பெயரில் ரெடிமேடு ஷோரூம் ஒன்று திறப்பு விழா நடைபெற்றது.

புதிதாக துவங்கும் இந்த ரெடிமேட் ஷோரூம் விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் அதன் உரிமையாளர் திறப்பு விழாவை முன்னிட்டு 50 பைசாவுக்கு காலை 9 மணி முதல் 1 மணி வரை மட்டுமே டி.சர்ட் தருவதாக விளம்பரம் செய்திருந்தார்.

இந்த விளம்பரத்தை கண்ட இளைஞர்கள் மற்றும் பெண்களும் கடை திறப்பதற்கு முன்பே அதிகளவில் குவிந்தனர். இதனை தொடர்ந்து ஷோரூமின் உரிமையாளர் 50 பைசா வாங்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு டோக்கன்களை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இந்த டோக்கனை வாங்க கூட்டம் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் இரு சக்கர வாகனங்களும், பொதுமக்களும் அதிக அளவில் கூடியதால் சின்னக்கடை வீதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த மணப்பாறை காவல்துறையினர் விரைந்து சென்று ஷோரூமின் உரிமையாளரிடம் உரிய அனுமதி பெறாமல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டத்தை கூட்டியதாக கூறி எச்சரித்து கடையை மூடினார்.

பின்னர் காவல்துறையினர் பொதுமக்களை கலைந்து போகக்கூறி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

“லாக் டவுன்” பெயரில் ஆரம்பிக்கப்பட்ட கடையை விளம்பரப்படுத்த எண்ணி அதிரடி சலுகையை அறிவித்த நிலையில் திறப்பு விழா அன்றே காவல்துறையினர் முழு லாக்டவுன் செய்துவிட்டனரே என கடை உரிமையாளர் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

Views: - 228

0

0