கனிமொழியால் எழுந்த சர்ச்சை..! ஏர்போர்ட்டில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்
12 August 2020, 2:46 pmசென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையம் வந்தார். பாதுகாப்பு சோதனைகளின் போது அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்த சம்பவத்தை கனிமொழி தமது டுவிட்டரில் பதிவிட்டார். இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என்ற நடைமுறை எப்போது வந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு, கடும் விமர்சனத்தையும், கண்டனத்தையும் எழுப்பின. முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமும் தமக்கும் இதுபோன்று பலமுறை நடந்திருப்பதாக கூற, விவகாரம் மேலும் முற்றியது.
இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.
கனிமொழி எம்பி எழுப்பிய இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மத்திய தொழிற்பாதுகாப்புப் படை பெண் அதிகாரியிடம் முழு விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.