பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி: முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…!!

11 November 2020, 5:14 pm
Quick Share

சென்னை: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு, பிரதமர் மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 3 கட்டங்களாக அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பின்னிரவு நீடித்த வாக்கு எண்ணும் பணியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மையை நிரூபிக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி இருந்த நிலையில் ஆளும் பாஜக கூட்டணி 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

OPS- Updatenews360

இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 4, விகாஸ்சீல் இன்சான் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக – ஜேடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ‘நல்லாட்சி என்பது முற்போக்கான அரசுக்கு வழிவகுக்கிறது. பீகார் மக்கள் என்டிஏ கூட்டணிக்கு தங்கள் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். மாநிலத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பீகார் மக்களுக்கு வாழ்த்துக்கள்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ‘பீகார் சட்டமன்றத் தேர்தலில் 125 தொகுதிகளைப் பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்து வென்றுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கும், நிதீஷ்குமாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 26

0

0