அது வேறு, இது வேறு : 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்!!

10 November 2020, 7:16 pm
CM Explain - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு ஆணை பிறப்பித்தது போல் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க ஆணை பிறப்பிக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீத வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது போல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி வழங்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் இது சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அது வேறு இது வேறு என்று விளக்கம் அளித்தார்.

இலங்கையில் நல்ல நிலையில் உள்ள படகுகள் அனைத்தையும் தமிழக மீனவர்கள் திருப்பிக் கொண்டு வந்துவிட்டனர். எஞ்சியுள்ள 121 படகுகளும் பழுதடைந்த நிலையில் உள்ள படகு தான் அவைகளை அங்குள்ள நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டுள்ளது, அதன் அடிப்படையில் தான் படகுகள் அழிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அந்த மாநில அரசுகளின் ஒப்புதல் பெறவேண்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறியுள்ளது போல் தமிழக அரசு கூற வேண்டிய அவசியம் இல்லை என்ற முதலமைச்சர் பழனிசாமி, அது போன்ற சூழ்நிலைகள் வரும்போது அதை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

கேரள மாநிலம் நெய்யாறு அணையில் உள்ள தண்ணீரை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவது தொடர்பாகவும் தமிழகத்திற்கு கேரளாவில் இருந்து பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் வருவது தொடர்பாகவும் நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறிய அவர் சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இன்று முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நாளை முதல் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகுப் போக்குவரத்து நடைபெறும் என்றும் கூறினார்.

மணக்குடி பாலத்திற்கு காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் பெண் அமைச்சராக இருந்த லூர்தம்மாள் சைமன் பெயர் வைக்கப்படும் என்றும் நாகர்கோவில் பகுதியில் இடலாக்குடி சந்தி தெருவுக்கு சுதந்திர போராட்ட தியாகி சதாவதானி செய்குதம்பி பாவலர் பெயர் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்பு நடைபெற்று வருவதாகவும் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்

Views: - 24

0

0