எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்களுக்காக அதிமுக தொடர்ந்து பாடுபடும் : எடப்பாடி பழனிசாமி உறுதி!!

Author: kavin kumar
22 February 2022, 10:13 pm
Quick Share

சென்னை: எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுக தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பாடுபடும் என எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ‘நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாற்று அணியினரின் பல்வேறு வகையிலான முயற்சிகளுக்கு மயங்கிவிடாமல் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற தெளிவான சிந்தனையுடன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்திருக்கும் வாக்காளப் பெருமக்களின் அன்பும், ஆதரவும்,

அ.தி.மு.கவின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. கழகத்துக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் வணக்கமும் நன்றியும் உரித்தாக்குக. எந்த வகையான சஞ்சலத்திற்கும், சபலத்துக்கும் இடம் தராமல் கொண்ட கொள்கைக்காகவும், கழகத்தின் வெற்றிக்காகவும் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும் கழகத்துக்கும் ஆதரவு அளித்த தோழமை இயக்கங்களுக்கும் மற்றும் நட்பு அமைப்புகளுக்கும் நன்றி கூறுகிறேன்.

அ.தி.மு.க என்றென்றும் மக்களுக்கான இயக்கம். குறிப்பாக எளிய மக்களுக்காகவும், அரசியல் அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் பங்கு பெற்றிராத சாமான்ய மக்களுக்காக அயராது பாடுபடும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் இயக்கம். எத்தனை இன்னல்கள், இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் அஞ்சாது மக்கள் பணியாற்றும் அ.தி.மு.க தொடர்ந்து மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து பாடுபடும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Views: - 395

0

0