தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் : மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு!!
4 February 2021, 12:15 pmமயிலாடுதுறை : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்று, சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கு தகுதிபெற்று சொந்த ஊர் திரும்பிய விளையாட்டு வீரருக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஏரவாஞ்சேரியை சேர்ந்தவர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங் (வயது 30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாள்கள் கோவாவில் நடைபெற்ற நேஷனல் பெடரேஷன் கப் 2020-2021 தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகம் சார்பாக பங்கேற்று, நீச்சல் போட்டியில் 100 மீட்டரில் தங்கப்பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், பிப்ரவரி 24-ம் தேதி நேபாலில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார். இந்நிலையில், தேசிய அளவிலான போட்டிகளில் வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய வீரர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதுகுறித்து, விளையாட்டு வீரர் ஆல்ட்ரின் ஆம்ஸ்ட்ராங் கூறும்போது, சிறுவயது முதல் நீச்சல், ஈட்டிஎறிதல் போட்டிகளில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஏரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊர் பொதுக்குளத்தை சுத்தம் செய்து, அங்கு நீச்சல் பயிற்சி பெற்று வந்ததாகவும், கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கவும், முறையான பயிற்சி அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
0
0