பள்ளி மாணவர்களுக்கு நடனமாடி பாடம் கற்பிக்கும் தமிழ் ஆசிரியை : எளிதாக எழுத்துக்களை நினைவூட்ட புதிய யுக்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 5:53 pm
Teacher Dance and Take Class -Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : கொரோனாவுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், எழுத்துக்களை நினைவூட்டவும் தமிழ் ஆசிரியை நடனமாடி கற்பித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகாலம் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வீடுகளிலேயே அடைபட்டிருந்த சூழலால் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் எழுத்துகளை மறந்து போயிருக்கின்றனர்.

குறிப்பாக ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப் பட்டாலும் ஒரு நேரடி வகுப்புகள் போல், வலிமையாக இல்லாத காரணத்தினாலும் மாணவர்கள் சரியாக படிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க முடியாத காரணத்தினாலும் , பெருமான மாணவர்கள் தங்களுடைய அடிப்படை எழுத்துக்களைக் கூட மறந்து போய் உள்ளனர்.

எனவே முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி வழங்கி வரும் சூழலில்
மாணவர்களின் விருப்பத்தையும், ஆர்வத்தையும், தூண்டும் வகையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பல இடங்களில் கதைகள் கூறி வித்தியாசமான முறையில் மாணவர்களை பள்ளி சூழலுக்கு கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப்பள்ளியில் கவிதா என்ற ஆசிரியர் பணி புரிந்து வருகிறார். இவர் மாணவர்களுக்கு எளிதில் எழுத்துக்களை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துக்களை சினிமா பாடல் மெட்டில் பாடி மற்றும் நடனமாடி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்.

குறிப்பாக தற்சமயம் குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடி அதன் மூலம் தமிழ் எழுத்துக்களை குழந்தைகளுக்கும் புரியும் வகையில் பாடம் நடத்தி வருகிறார்.

பரதநாட்டியம் வடிவில் சில எழுத்துகளை கற்றுக் கொடுக்கிறார். மேலும் சொடக்கு மேல சொடக்கு போட்டு என்ற சினிமா பாடல் மெட்டிலும் எழுத்துக்களை கூறி அந்த பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார்.

குழந்தைகளும் ஆசிரியர் சொல்படி நடனமாடி தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த வித்தியாசமான முறையில் பாடம் நடத்துவது மாணவர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Views: - 215

1

0