தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி..!

7 September 2020, 2:25 pm
nallasiriyar - updatenews360
Quick Share

சென்னை : தமிழகம் முழுவதும் 375 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட நல்லாசிரியர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி இரா.சி. சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சரை இன்று சந்தித்து விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Views: - 7

0

0