தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் : தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய கம்யூ., வலியுறுத்தல்

10 February 2021, 1:49 pm
Vote_UpdateNews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்தத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தலைமையிலான அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அப்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையர் அவர்களின் சென்னை ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதாவது, தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ள சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அனைத்துத் தொகுதிகளிலும் (234) ஒரே நாளில் நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த 2020 டிசம்பர் 22 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழுவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சமர்பிக்கப்பட்ட 17 முன்மொழிவுகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தற்போதுள்ள தேர்தல் நடைமுறை வாக்காளர்களின் இயல்பான உணர்வை நேர்மையாக பிரதிபலிப்பதில்லை. மேலும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆட்படும் நேர்வுகளும் ஏற்படுகின்றன. ஆகையால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் பெறும் முறையில் தேர்தல் நடைமுறைகள் திருத்தியமைக்கப்பட வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறை குறித்து ஒரு பொது விவாதம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் வாக்காளர் பட்டியல் குறுந்தகடு மூலமாகவும் வழங்கப்படுகிறது. இதன் பயன்பாடு குறைந்து வருவதால் வாக்காளர் புகைப்படம் உள்ளிட்ட முழுமையான பட்டியல் பென்டிரைவ் மூலம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 1

0

0