தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பா…? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்…!!!

Author: Babu Lakshmanan
2 December 2021, 11:41 am
Minister Subramanian -Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனாவின் உருமாற்று தொற்றாக கருதப்படும் புதிய வகை வைரஸ் ஒமிக்ரான் பல்வேறு நாடுகளிலும் நுழைந்துவிட்டது. இதன் எதிரொலியால், இந்தியாவும் உஷார் நிலையில் உள்ளது. மேலும், தமிழகம் பொருத்தவரையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்க அனைத்து விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் அனைவருக்கும் முதலில் காய்ச்சல் இருப்பதை கண்டறியப்படுகிறது. காய்ச்சல் 100 டிகிரி மற்றும் அதற்கும் மேல் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா தொற்று இருக்கும் விமானப் பயணிகளுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகளை மரபணு சோதனைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நேற்று வெளிநாடுகளில் இருந்து வந்த விமானப் பயணிகள் 477 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. மேலும், தமிழகத்தில் பள்ளி, சந்தை உள்பட கூட்டம் அதிகம் இருக்கும் 8 பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர்களின் மாதிரிகளை தினமும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

இதனால், தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. இருப்பினும், பொது மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 228

0

0