எதுவெடுத்தாலும் லஞ்சம்… பொறியாளர் பழனி மீது குவியும் புகார்கள் !! விரைவில் பாயும் நடவடிக்கை…!!!

1 February 2021, 4:31 pm
Quick Share

சென்னை : திருச்சி மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனியின் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் நடவடிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

திருச்சி மாநில நெடுஞ்சாலை துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வருபவர் பழனி. பணிக்காலம் முடிந்தும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்ற இவர், பிக்சிங் டெண்டர், செட்டிங் டெண்டர், பர்சன்டேஜ் டெண்டர் என பலவகையான டெண்டர்களில் கை தேர்ந்தவர் எனக் கூறப்பட்டு வருகிறது. பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பிக்சிங் டெண்டரில் ஈடுபட்ட போது வசமாக சிக்கினார். இதில், சுமார் ரூ.495 கோடி முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பொறியாளர் பழனியின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். ஆனால், இவர் மீது எந்த விசாரணையும் நடத்தப்படாத நிலையில், மாறாக ஒப்பந்தம் நிறுவனங்களை மிரட்டி வசூலிக்கும் பணிகள் தீவிரமாக இருந்து வந்தது. குறிப்பாக, டெண்டர் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்து போடுவதற்கு 2 சதவீதம் கமிஷன் கேட்பதும், சாலை பணிகள் நடந்து வரும் பகுதிக்கு சென்று அங்கேயே ஒப்பந்த நிறுவனங்களை மிரட்டி பெரும் தொகையை பேரம் பேசி வாங்குவதுமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது மனைவி, வாரிசுகள் மற்றும் உறவினர்கள் பெயரில் சுமார் 50 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கி குவித்திருப்பதாகவும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு, பழனி மீது முதலமைச்சரின் தனிப்பிரிவு,நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும்ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், பொறியாளர் பழனியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.‌

இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை ஊழியர் சங்கத்தினர் கூறுகையில்,” கண்காணிப்பு பொறியாளர் பழனியின் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஏற்ப டெண்டர் விதிமுறைகளை மாற்றி விடுவார்.‌ இதேபோல, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் இளவரசன், கோட்ட பொறியாளர் முருகபூபதி உள்ளிட்டோரும் சிபிஐ வசம் சிக்கினர். ஆனால், பழனி தப்பிவிட்டார். முதல்வரின் துறையில் கண்காணிப்பு பொறியாளர் பழனி டெண்டர் மோசடி செய்து வருவதை தடுக்க யாரும் முன்வரவில்லை. இவர் மீது விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், “டெண்டர் விதிமுறைப்படி பணிகளை நடத்தினாலும் ஏதாவது குறை சொல்லி பில் தொகையை நிறுத்தி விடுவேன் என பழனி நெருக்கடி கொடுப்பார். இவரின் நெருக்கடியால் திருச்சி மண்டலத்தில் ரோடு, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனது பதவிக் காலம் நீடிக்க பட்டதால் இவரின் லஞ்ச வசூல் வேட்டை அதிகமாகிவிட்டது. அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என்றனர்.

Views: - 30

0

0