கோவை, திருப்பூரைச் சேர்ந்த 15 மாணவிகள் உக்ரைனில் சிக்கி தவிப்பு … உடனே மீட்க முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
25 February 2022, 11:43 am
Quick Share

சென்னை : உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

நேட்டோ அமைப்பில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 2வது நாளாக நடந்து வரும் இந்த போரில், டாங்கிகள், போர் விமானங்கள் மூலமாக, சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இந்தத் தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

பணி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உக்ரைன் சென்றுள்ள இந்தியா உள்ளிட்ட பிற நாட்டவர்களை, அந்தந்த நாடுகள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், போர் பதற்றம் காரணமாக, மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தங்களது மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த மாணவி பார்கவி, சூலூரை சேர்ந்த மாணவி ரஞ்சினி உள்ளிட்டோர் உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் போரால் அவர்கள் அங்கு பெரும் அச்சத்துடன் தவித்து வருகின்றனர். போர் பதற்றம் நிறைந்த இடத்தில் அவர்கள் சிக்கியுள்ளதாகவும், எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்படி பல்கலைக்கழகம் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், உயிரை கையில் பிடித்தபடி இருப்பதாகவும், கோவை, திருப்பூரைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் அங்கு தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

உக்ரைனில் உயிருக்கு ஆபத்தான நிலையில், தவித்து வரும் தமிழக மாணவ, மாணவிகள் அனைவரும், உடனடியாக நாடுதிரும்பவும், அதுவரை அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 682

0

0