தீபாவளி நாளன்று அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : 2 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2021, 4:56 pm
திருப்பூர் வாலிபாளையும் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.
திருப்பூர் வாலிப்பாளையம் சடையப்பன் கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முதல்மாடியில் தர்மராஜ், 50 என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வெளியூர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
இதனிடையே அவரது வீட்டில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கும், தர்மராஜுவுக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் வீடு பூட்டி இருந்த காரணத்தாலும் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிட போராட்டங்களுக்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது தாமதமாகவே அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது இதன் காரணமாக தீயை முற்றிலும் அணைப்பதற்கு வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது.
வீட்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் முன் வீட்டில் விளக்கு பற்ற வைத்துள்ளனர். அதன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் அல்லது மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியுள்ளது. இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0