பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..!!

22 January 2021, 9:04 am
pazhani temple - updatenews360
Quick Share

திண்டுக்கல்: முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் 3ம் படைவீடான பழனி முருகன்கோவில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டி உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த திருவிழா காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பழனி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறவில்லை. மாறாக ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தைப்பூச கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

முக்கிய நிகழ்ச்சியான வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வரும் 27ம் தேதியும், தேரோட்டம் 28ம் தேதியும் நடைபெறுகிறது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி தினமும் நடைபெறுகிறது. தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு, முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதோடு அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகின்றனர். குறிப்பாக காரைக்குடி, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்து கோவிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பாதயாத்திரை பக்தர்களின் நலனுக்காக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்க இலவச தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள், வெளிச்சத்துக்காக பாதையோரம் மின்விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரத்தில் விபத்தை தடுக்க பக்தர்களுக்கு போலீஸ் துறை சார்பில் ஒளிரும் பட்டைகள் வழங்கப்படுகின்றன. தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோவிலில் முன்பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆதார் அட்டை மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். தைப்பூசத்தையொட்டி பழனியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Views: - 0

0

0