பக்கத்து வீட்டுக்காரருக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததால் வந்த வம்பு… புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி!!

Author: Babu Lakshmanan
25 April 2022, 6:00 pm
Quick Share

தஞ்சை : தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணை ஊற்றி புதுமாப்பிள்ளை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருமலை சமுத்திரம் அருகே உள்ள மாதுரன் புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி உதய கண்ணன் என்பவர் மனு கொடுக்க காத்திருந்தார்.

அப்போது திடீரென அவர் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து உடலில் மண்எண்ணையை தன் மேலே ஊற்றினார். அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே ஓடிச்சென்று பாட்டிலைப் பிடுங்கி வீசினர். இதுகுறித்து உதய கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர் கூறியதாவது :- எங்கள் வீட்டுக்கு பஞ்சாயத்து குழாயில் இருந்து குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அந்த இணைப்பிலிருந்து எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் தானாக முன்வந்து குடிநீர் இணைப்பு கேட்டார். எங்கள் இணைப்பில் இருந்து சுமார் ஐந்து ஆண்டுகளாக குடிநீர் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் எனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எங்களுடைய தேவைக்காக கழிவறை வசதி வேண்டி குழி தோண்டும் போது எதிர்பாராதவிதமாக குழாய் உடைந்து விட்டது. உடனே அந்த நபரிடம் வேறு வழியில் குடிநீர் அமைத்துக் கொள்ளுமாறு கூறி விட்டோம். பின்னர் ஊராட்சி மன்ற தலைவரிடமும் கூறினோம். அவர்கள் ஒரு கட்சியை சேர்ந்த நபருடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அப்போது ஒரு வார காலத்திற்கு தண்ணீர் கொடுக்குமாறு பின்னர் ஒரு வாரம் கழித்து மாற்றுப்பாதையில் குடிநீர் இணைப்பு அமைத்துக் கொள்ளுமாறு என்னிடம் அந்த நபர் சமாதானம் பேசி அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனைவரும் ஜவுளி எடுக்க வெளியூர் சென்று விட்டோம்.

அந்த நேரத்தில் அந்த நபர் சிலருடன் வந்து குடி போதையில் என்னையும், குடும்பத்தினரையும் அவதூறாக பேசி திட்டியுள்ளார். மேலும் கம்பி வேலி அமைத்து குடிநீர் குழாயை உடைத்து எங்கள் வீட்டை சேதப்படுத்தி உள்ளார். பின்னர் போலீசாரிடம் புகார் மனு கொடுக்கச் சென்றபோது ஒரு போலீஸ்காரர் முன்பு நடந்த சம்பவங்களை காட்டக்கூடாது என்றும் வலியுறுத்தி பலமுறை மனுவை சாதகமாக எழுத கட்டாயப்படுத்தி உள்ளார்.

தற்போது நான் அரசு பொது தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்து என் வாழ்க்கையே சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர். எனவே அந்த நபர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, போலீசார் உதய கண்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 769

0

0