சாலையில் ஓடிக்கொண்டிருந்த வேனில் திடீர் தீவிபத்து… முழுவதும் எரிந்து சாம்பலான அதிர்ச்சி… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 9 பேர்…!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 10:11 pm
Quick Share

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூரில் இருந்து மூன்று பெண்கள் உட்பட 9 பேருடன் திருச்சி விமான நிலையத்திற்கு ஆம்னி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்குடி அருகே காமாட்சிபுரம் பிரவு சாலையில் சென்று கொண்டிருந்த போது ஆம்னி வேனில் இருந்து புகை வந்துள்ளது.

உடனடியாக டிரைவர் சக்திவேல் வண்டியை சாலையோரம் நிறுத்தினார். புகை அதிகமாக வந்ததால் வேனில் இருந்தவர்களும் சட்டென்று கீழே இறங்கி விட்டனர். புகை எதனால் வருகிறது என்று டிரைவர் சக்திவேல் பார்ப்பதற்குள் தீ மளமளவென்று எரிய தொடங்கியது. இதில் ஆம்னி வேன் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தக்க நேரத்தில் ஆம்னி வேன் டிரைவர் வண்டியை நிறுத்தியதால் உயிர் சேதம் எதவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 625

0

0