ஆற்றில் அடித்துச்சென்ற சிறுவனை காப்பாற்றிய காவலர்: மத்திய அரசின் வீரதீர செயலுக்கான விருதுக்கு தேர்வு..!!

6 July 2021, 12:34 pm
Quick Share

தஞ்சாவூர்: மத்திய அரசு சார்பில் வீர தீரச் செயல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு வழங்கப்படும் பிரதமரின் உயிர்காக்கும் காவலர் விருதுக்காக தஞ்சாவூர் காவலர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாடு மேலத்தெருவைச் சேர்ந்தவர் எஸ்.ராஜ்கண்ணன், இவர் கடந்த 2010ம் ஆண்டு போலீஸில் பணிக்குச் சேர்ந்து தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவு காவலராக 10 ஆண்டுகளாகப் பணியாற்றினார். தற்போது பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு பணிக்காக காலையில் ஊரில் இருந்து தஞ்சாவூருக்கு ராஜ்கண்ணன் சென்றுள்ளார். அப்போது தஞ்சாவூர் ஆத்துப்பாலம் அருகே சென்றபோது, கல்லணை கால்வாய் ஆற்றில் சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததை பார்த்துள்ளார். அப்போது ஆற்றங்கரையில் நடைப்பயிற்சி சென்றவர்கள், தீயணைப்புப் படையினருக்கு போன் செய்து தெரிவித்துவிட்டு கூட்டமாக நின்றுள்ளனர்.

இதைப் பார்த்த ராஜ்கண்ணன் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ஆற்றில் குதித்து சுமார் 500 மீட்டர் வரை தண்ணீரில் நீந்திச் சென்று, ஆற்றில் விழுந்த சிறுவனின் உயிரைக் காப்பாற்றினார். இதையடுத்து ராஜ்கண்ணன் செயலை அறிந்த அப்போதைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன், மாவட்ட ஆட்சியர் சுப்பையனிடம் தெரிவித்துள்ளார்.

அவர் தமிழக அரசின் வீரதீரச் செயலுக்கான விருதுக்குப் பரிந்துரை செய்த நிலையில், தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான விருது கடந்த ஜூன் 30ம் தேதி அறிவிக்கப்பட்டதில், நாடு முழுவதும் 14 பேர் தேர்வாகினர். அதில், தமிழகத்தில் இருந்து ராஜ்கண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சக போலீஸார் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 175

0

0