தட்டார்மடம் இளைஞர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது : 22ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!

Author: Udayachandran
8 October 2020, 6:18 pm
tuticorin Youth- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தட்டார்மடம் அருகே உள்ள இளைஞர் செல்வன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லால் மகன் செல்வன் (வயது 32). வாட்டர் கேன் வியாபாரியான இவர், கடந்த 17ம்தேதி தட்டார்மடம் காட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரை, அதிமுக பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் காரில் கடத்தி கொலை செய்திருப்பதும், இதற்கு உடந்தையாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குபதிவு செய்தனர். சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, திசையன்விளை பகுதிகளில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருமணவேல், முத்துகிருஷ்ணன், சின்னதுரை, முத்துராமலிங்கம் ஆகியோரை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான போலீசார், 6நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையின் அடிப்படையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பேச்சி, கருப்பசாமி ஆகிய 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் பாரதிதாசன் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இருவரும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Views: - 45

0

0