”பாஜக மதம் சார்ந்த அரசியலை செய்யாது”: தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை..

2 February 2021, 12:55 pm
annamalai - Updatenews360
Quick Share

கோவை : பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமனின் பேச்சு சர்ச்சையாக இருக்கின்றது என்றால், அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும் எனவும் , அவர் மீது காவல் துறை சட்டம் நடவடிக்கைகள் எடுத்துள்ளது அதை நீதிமன்றத்தில் நாங்கள் எதிர்கொள்கின்றோம் என அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை ராஜவீதி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடி முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்த முகாமில் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் எளிதாக பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின் மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மத்திய அரசின் 191 திட்டங்கள் மக்களுக்காக நடைமுறையில் இருக்கின்றது எனவும், அரசு தனியாக திட்டங்களை கொண்டு சென்றாலும் , தொண்டு நிறுவனங்கள மூலம் இணைந்து செயல்படுவதன் மூலம் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைகின்றது என தெரிவித்தார்.

அரசியலை தாண்டி திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றது எனவும், கோவை தெற்கு தொகுதியில் மட்டும் நடத்தப்படவில்லை, இங்கு முதல்கட்டமாக துவங்கி இருக்கின்றோம் எனவும் ,எல்லா தொகுதிகளில் அடுத்தடுத்து நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் பா.ஜ.க நிர்வாகி கல்யாணராமன் போராட்டத்தில் பேசினார், அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அதற்குள் போக விரும்பவில்லை, சட்டம் தன் கடமையை செய்யட்டும் என தெரிவித்தார்.

அதே வேளையில் மோடியை தரக்குறைவாக விமர்சித்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்,மேலும் சிலரது பெயரை காவல் துறையிடம் கொடுத்துள்ளோம், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கல்யாணராமன் மீது சட்டம் நடவடிக்கை எடுக்கட்டும், அதை நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்கின்றோம் என தெரிவித்த அவர், கல்யாணராமன் விவகாரத்தில் அமைதி காக்கவில்லை, அவர் பேசிய சில பேச்சு சர்ச்சையாகின்றது, அதை கோர்ட் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

பா.ஜ.க எப்போதும் மதம் சார்ந்த அரசியல் செய்யாது, மத நம்பிக்கையை அவமானம் செய்யும் கட்சி கிடையாது என கூறிய அவர், நபிகள் நாயகம் இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பிராபிட், நிச்சயமாக அவர்கள் பிராபிட்டை கும்பிட அவர்களுக்கு ரைட் உண்டு என தெரிவித்த அவர்,கல்யாணராமனின் பேச்சு சர்ச்சையாக இருக்கின்றது என்றால், அதை கோர்ட் முடிவுசெய்யட்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தேர்தல் களத்தில் திட்டம் போட்டு வன்முறையை சந்திக்க வேண்டும் என யாரோ திட்டமிட்டுள்ளனர் என நினைக்கின்றேன் என கூறிய அண்ணாமலை, கொடைக்கானல், மேட்டுப்பாளையம் சம்பவங்கள் அதையே காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 0

0

0