வரும் தேர்தலில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும்: பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் நம்பிக்கை.!!

4 September 2020, 10:02 am
Quick Share

தமிழகத்தில் வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும் என பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் கூறும்போது, தற்போது தேர்தல் களத்தில் நிற்கும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாக கூறினார்.

2021 தேர்தலை முடிவு செய்யும் சக்தியாக பாஜக இருக்கும் என்றும், 12 கோடி தொண்டர்களையும், 300 எம்பிக்கயும் கொண்ட உலகில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வரும் தேர்தலில், கருப்பர் கூட்டத்துக்கு துணை நின்ற திமுகவை பாஜக வதம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞரணி தொண்டர்கள் 2021 தேர்தலில் புனித ஜார்ஜ் கோட்டையில் காவிக் கொடி பறக்கும் வகையில் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி.செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பாஜக இளைஞரணியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஆக.31-ல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செப்.13-ம் தேதி நீட் தேர்வு எழுதும் பேருந்து வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செப்.11 மாலை 6 மணி வரை மாணவர்கள் பதிவு செய்ய இதற்கான உதவி தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக கட்சி புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை விசயத்தில் இரட்டை வேடம் போடுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிகள் கற்றுத்தரப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஏழை மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இரட்டை மொழி கற்றுத்தரப்படுகிறது. 2016 தேர்தலைவிட 2021- தேர்தலில் மாற்று சக்தியாக பாஜக உருவெடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தகுதியானவர் என்பதால் தான் மாநில துணைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் சண்முக ராஜேஸ்வரன், மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட துணைத்தலைவர் குட்லக் ராஜேந்திரன், இளைஞரணி மாநில துணைத் தலைவர் ஆத்ம கார்த்திக் உள்ளிட்ட காட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Views: - 5

0

0