‘அட, சோதிக்காதீங்க எங்கள’… வீடு, கடைகளை மறித்து சாக்கடை கட்டிய மாநகராட்சி நிர்வாகம் : பொதுமக்கள் தவிப்பு..!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 4:31 pm
Quick Share

நெல்லையில் வீடு, கடைகளுக்கு செல்ல முடியாத வகையில் கழிவு நீர் சாக்கடையை மாநகராட்சி நிர்வாகம் கட்டியதால் பொதுமக்களை தவிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

நெல்லை டவுன் குற்றால ரோடு மிகவும் பிரதான சாலையாகும். இந்த சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் சாலையின் ஓரம் மாநகராட்சி சார்பில் கழிவு நீரோடை கட்டப்பட்டது. இந்த கழிவுநீரோட இரண்டடி உயரத்தில் கட்டப்பட்டதால் மக்கள் வீடுகளுக்கு செல்ல சுவரை ஏறி இறங்குவது போல் செல்கின்றனர்.

மேலும், பள்ளி செல்லும் குழந்தைகள், வயதானவர்கள் வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். வீட்டினுள் உள்ள கழிவு நீர் ஓடைக்கு செல்ல முடியாமலும் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். மழைக்காலத்தில் மழை நீர் வீட்டினுள்ளே தேங்கி விடும்.

மாநகராட்சி நிர்வாகம் மக்களைப் பற்றி யோசிக்காமல் தங்களுடைய வேலைகளை அவர்கள் விருப்பப்படி செய்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், கழிவு நீரோடை கட்டும்போது மாநகராட்சி அதிகாரிகள் வந்து எந்த ஆய்வும் செய்யவில்லை என்றும், காண்ட்ராக்டர்கள் அவர்களது இஷ்டம் போல் கட்டி உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கும், வாகனங்களை வெளியே கொண்டு வரவும் முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நேரில் கழிவுநீர் ஒடையை பார்வையிட்டு உடனடியாக அதை சீர் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 308

0

0