சிறுவனுக்கு ஸ்கூட்டி கொடுத்த தாய்க்கு ஒரு நாள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!
30 January 2021, 10:36 amகோவை: சிறுவனுக்கு தனது இரு சக்கர வாகனத்தை கொடுத்து அனுப்பிய தாய்க்கு ஒரு நாள் முழுவதும் குற்றவாளிக்கூண்டில் நிற்க வைத்து தண்டனை வழங்கியுள்ளது கோவை நீதிமன்றம்.
ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன், கடந்தாண்டு, பிப்ரவரி 9 ஆம் தேதி நண்பனை அழைத்துக் கொண்டு தனது தாயாரின் ஸ்கூட்டியில் சென்றுள்ளான்.
காந்திபுரம் பகுதியில் சென்றபோது பேருந்து மோதியதில், ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த நண்பனான 16 வயது சிறுவன் படுகாயமடைந்து உயிரிழந்தான். இது தொடர்பாக, கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவினர் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், 18 வயது நிரம்பாத சிறுவன், ஸ்கூட்டியை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதால், வாகனத்தின் உரிமையாளரான, அவரது தாயார் பாண்டீஸ்வரி மீது தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஜே.எம்.8 மாஜிஸ்திரேட் ராமதாஸ், 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி, வாகன உரிமையாளரான பாண்டீஸ்வரியை, கோர்ட் கலையும் வரை குற்றவாளிக் கூண்டில் நிற்க வைத்து ஒரு நாள் தண்டனையுடன், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து பாண்டீஸ்வரி கடந்த 26ஆம் தேதி காலை முதல் மாலை வரை நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் போலீஸ் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டார்.
18 வயது நிரம்பாத தங்கள் குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்தை கொடுக்கும் பெற்றோருக்கு கோவை நீதிமன்றம் வழங்கிய இந்த தண்டனை சாலை பாதுகாப்பை கடைபிடிக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
0
0