ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்… விவசாயியிடம் கெஞ்சிக் கேட்ட அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 3:41 pm
Collector Office Confiscate - Updatenews360
Quick Share

மதுரை மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டு கடந்த 1985 ஆம் ஆண்டு செட்டி நாயக்கன்பட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அப்போதைய தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி 55 விவசாயி களிடமிருந்து 215 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் செட்டி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் 10 ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கி உள்ளார்.

இதற்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ 5,500 வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனை ஏற்காத மனோன்மணி திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏக்கருக்கு இழப்பீடாக ரூ 1 லட்சமும், 30 சதவீதம் ஆறுதல் தொகையும், 15 சதவீதம் வட்டியும் வழங்க உத்தரவிட்டது.

இதனை ஏற்காத விவசாயி மனோன்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் இழப்பீடு தொகை கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2012ம் ஆண்டு ஏக்கருக்கு ரூ 2.5 லட்சமும், 30 சதவீதம் ஆறுதல் தொகையும், 15 சதவீதம் வட்டியும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் இதுவரை இழப்பீட்டுத் தொகை மனோன்மணிக்கு வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீடு தொகை 77 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும் இல்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்று கார்கள் மற்றும் தளவாட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து இன்று 07.02.23 பாதிக்கப்பட்ட விவசாயி மனோன்மணி அவரது வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கார் மற்றும் தளவாடஜாமான்களை ஜப்தி செய்ய வருகை தந்தனர்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நின்றிருந்த காரை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர். மேலும் தளவாட சாமான்களை எடுத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் சம்பந்தப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் இழப்பீட்டுத் தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Views: - 102

0

0