தீபாவளி பண்டிகை எதிரொலி : எப்போதும் பரபரப்பாக இருக்கும் பின்னலாடை நிறுவனங்கள் ஸ்தம்பித்தது!
Author: kavin kumar5 November 2021, 8:40 pm
திருப்பூர்: தீபாவளி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் ஏராளமான வெளி மாவட்ட மற்றும் மாநில தொழிலாளர் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வரக் கூடிய சூழ்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டு விடுமுறை அழிக்கப்பட்டதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக சொந்த ஊர் சென்றனர். தொடர் விடுமுறை என்பதால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி வராததன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் மாநகரம் இன்று களையிழந்துள்ளது. குறிப்பாக பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஜாப் வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பின்னலாடை துறை என்பது சங்கிலித் தொடர் போன்றது என்பதால் வடமாநில தொழிலாளர்களை வைத்துக்கொண்டு மட்டும் நிறுவனங்களை இயக்க முடியாது. எனவே சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் திரும்பி வரும்பொழுது தான் உற்பத்தியை துவங்க முடியும் வரும் திங்கட்கிழமை முதல் பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்பட்டு உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இருப்பினும் முழுமையான உற்பத்தியை அடைவதற்கு 8 முதல் 10 நாட்கள் வரை ஆகும். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் திரும்பும் பட்சத்தில் திருப்பூர் மாவட்டம் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.
0
0