மாடியில் இருந்து உயிருக்கு போராடிய சிறுவன் : சாதுர்யமாக காப்பாற்றிய வியாபாரி!!

Author: Udayachandran
11 October 2020, 10:19 am
Trichy - Updatenews360
Quick Share

திருச்சி : மணப்பாறை அருகே ஆபத்தான நிலையில் மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்து தொங்கிய 4 வயது சிறுவனை சாதுர்யமாக காப்பாற்றிய வியாபாரியின் வீடியோ வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முகமதுஷாலிக் (வயது 41). ஓம வாட்டர், பினாயில், ஆசிட், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் விற்பணை செய்யும் வியாபாரியான இவர் கடந்த செவ்வாய் கிழமை (8ம் தேதி) இருசக்கர வாகனத்தில் ஓந்தாம்பட்டி, பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை, பூலாம்பட்டி வழியாக மாலையில் தோப்புப்பட்டி என்ற இடத்தில் சாலையில் வரும்போது அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து சிறுவனின் கூக்குரல் கேட்டது.

காப்பாற்றுமாறு சிறுவன் சத்தமிட்டதால் முகமதுஷாலிக் வண்டியை வேகமாக நிறுத்திவிட்டு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்துக்கொண்டு வெளியே தொங்கிக்கொண்டிருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சிறுவனின் 6 வயது மதிக்கத்தக்க சகோதரி ஒருவர் மேலிருந்து சிறுவனின் கையை பிடித்து கொண்டிருந்தாலும் அவனை மேலே தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார். பின்னர் முகமதுஷாலிக் சிறுவன் தொங்கிய இடத்தின் கீழே நின்று கொண்டு சிறுவனின் கையை விடுமாறு அவரது சகோதரியிடம் கூறியுள்ளார்.

அச்சிறுமி சிறுவனின் கையை விட்டபோது கீழே நின்ற முகமதுஷாலிக் லாவகமாக சிறுவனை கீழே விழாமல் பிடித்து காப்பற்றியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றபோது தான் சிறுவன் வீட்டின் மாடியில் விளையாடடும் போது சுவற்றில் தொங்கியதும் தெரியவந்துள்ளது.

சிறுவனை சாதுர்யமாக காப்பாற்றிய வியாபாரிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 45

0

0