சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது
Author: kavin kumar8 January 2022, 6:49 pm
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தலைமறைவாக இருந்த ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட களத்தூரில் வழிவிடு முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. இதில் கடந்த 1 ஆம் தேதி புத்தாண்டன்று 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சமும், காயமுற்ற அவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.
இதனிடையே உரிய பாதுகாப்பின்றி கவனக்குறைவாக செயல்பட்ட காரணத்தினால் பட்டாசு ஆலையின் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக ரத்து செய்த நிலையில் பட்டாசு உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வந்தனர். இந்நிலையில், விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரனை காவல்துறை தேடி வருகிறது.
0
0