வங்கியில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்த நபர்! 40 கள்ள நோட்டுகள்… கோவையில் அதிர்ச்சி!
17 November 2020, 1:16 pmகோவை : கோவையில் தனியார் வங்கியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்த நபரை பிடிக்க தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஹித்தேஷ் ஆனந்த். தனியார் மென்பொருள் நிறுவன பணியாளரான இவர் வடவள்ளி அருகே உள்ள தனியார் வங்கியில் நேற்று ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய சென்றார்.
அப்போது அவர் கொண்டு வந்த பணத்தை எண்ண இயந்திரத்தில் வைத்துள்ளனர் வங்கி ஊழியர்கள். அப்போது 40 ரூ.500 நோட்டுகள் மட்டும் போலியானது என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கியின் உதவி மேலாளர் கோகுல்நாத் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஹித்தேஷ் ஆனந்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது நீலகிரி மாவட்டத்தில் மதன் லால் என்பவரிடம் கடன் வாங்கி வந்ததாகவும், தனக்கும் இந்த கள்ள நோட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த நோட்டுகளை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த நீலகிரி விரைந்துள்ளனர்.
வங்கியில் கள்ள நோட்டுக்களை டெபாசிட் செய்ய முயன்ற விவகாரம் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.