சாலையிலும் ஓடுது சிறுவாணி… குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் ஓடும் அவலம் : நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2022, 4:48 pm
Drinking Water Waster -Updatenews360
Quick Share

கோவை வடவள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக வழிந்தோடி குழிகளில் நிரம்பி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டது.

ஏற்கனவே இந்த சாலை கடுமையாக சேதம் அடைந்திருந்த நிலையில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த நீர் அங்குள்ள குழிகளில் நிரம்பி இருப்பதால் குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகளும் பிற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி முடிந்து குழந்தைகளை அழைத்து வரும் பெண்கள் குழியில் தவறி விழுந்து விடுவோமோ என்கிற அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கவும், சாலையை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடையர்பாளையம் பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிநீர் சாலையில் வீணாகி வருவது அப்பகுதி மக்களிடையே அதிப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 425

0

0