புகார் அளிக்க சென்ற பெண்ணை கற்பழித்த போலீஸ் : கருவை கலைத்த காவலர், மருத்துவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 2:14 pm
Police Raped Complaint Women - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : இரண்டாவது திருமணம் நடைபெற உள்ள நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகாரளிக்க சென்ற பெண்ணை கற்பழித்து கருவை கலைத்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் ,டாக்டர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மோக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின் (வயது 32). இவருக்கு திருமணமாகி 9 -வயதில் ஒரு மகளும் உண்டு.

கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து ஆன நிலையில், ஜோஸ்பின் இரண்டாவதாக ஒருவரை காதலித்து திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர் ஜோஸ்பினை ஏமாற்றி உள்ளார்.

இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற ஜோஸ்பினுக்கு உதவுவதாகக் கூறி அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் (வயது 40 ) என்பவர் பல இடங்களுக்கு அழைத்து அலைக்கழித்து பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கர்ப்பமடைந்த ஜோஸ்பின் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கத்தால் தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும் தற்போது என்ன செய்வதென தெரியவில்லை எனவும் தகவலை சுந்தரலிங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

சுந்தரலிங்கம் அவரை தனது நண்பர்களுடன் ஆட்டோவில் அனுப்பி வைத்து திருவட்டாரை அடுத்த புலியிறங்கி என்னும் பகுதியில் உள்ள கிளினிக்கில் டாக்டர் கார்மல் ராணி (வயது 38) என்பவர் மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறி கருவை கலைத்த தாக கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த ஜோஸ்பின் அப்பகுதியில் கத்தி கூச்சலிட்டு உள்ளார். பின்னர் அவரை மீட்டு தக்கலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அங்கு யாரும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுந்தரலிங்கத்தின் ஆலோசனையின் பேரில் அங்கு அனுமதிக்கப்பட்ட ஜோஸ்பின் மொபைல் போன் மற்றும் உடமைகளையும் பறித்ததோடு அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் நடந்த சம்பவங்களை பலமுறை களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் டிஎஸ்பி அலுவலகம் எஸ்பி அலுவலகம் என பல்வேறு புகார்களை கொடுத்து உள்ளார்.

ஆனால் புகார்களை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாதிக்கப்பட்டது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், கணேஷ் குமார் (வயது 35) (பளூகல் காவலர்), விஜின் (வயது 34), மார்த்தாண்டத்தை சேர்ந்த அபிஷேக் (வயது 25 ), களியக்கவிளையை சேர்ந்த உமேஷ் (வயது 45 ), திருவட்டாரை அடுத்த புலியிறங்கியை சேர்ந்த டாக்டர் .கார்மல் ராணி (வயது 38) காரக்கோணம் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தேவராஜன் (வயது 57) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 8 -பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 357

0

0