வீட்டு ஹாலில் படுத்துறங்கிய போது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து : இளைஞர் பரிதாப பலி.. கோவையில் சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 4:01 pm
Wall Collpased Dead -Updatenews360
Quick Share

கோவை : ராமநாதபுரம் பகுதியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை ராமநாதபுரம் பகுதியிலுள்ள பாரதி நகர் கருப்பண்ண தேவர் வீதியைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் வினோத் கண்ணன் (வயது 34). இவருக்கு சாருலதா என்ற 22 வயது மனைவியும், சிவானி ஸ்ரீ என்ற 2 அரை வயது பெண் குழந்தையும்,தாரிகா ஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

நேற்று இரவு வினோத் கண்ணன் மற்றும் குடும்பத்தார் படுக்கை அறையில் படுத்திருந்தனர். தொடர்ந்து வினோத் கண்ணனுக்கு படுக்கை அறையில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வினோத் கண்ணன் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் உறங்கினார். அப்போது இன்று அதிகாலை 1;30 மணி அளவில் திடீரென ஹாலில் இருந்த மேற்கூரையின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் வினோத் கண்ணனின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வினோத் கண்ணனின் உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக டி-1 ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 344

0

0