கோமுகி அணை திறப்பு: குடியிருப்பை சூழ்ந்த நீர்….அவதியில் மக்கள்…!!!

Author: Aarthi
11 October 2020, 4:19 pm
komugi dam - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி: கோமுகி அணை திடீரென திறக்கப்பட்டதால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அணையானது 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 1-ம் தேதி கோமுகி அணையிலிருந்து வினாடிக்கு புதிய பாசன வாய்க்காலில் 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையால் நீர்வரத்து 600 கன அடியாக உள்ளதால், பொதுப்பணித் துறையினர் நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரை திறந்துள்ளனர். பின்னர் நேற்று காலை தண்ணீர் வெளியேற்றத்தை 600 கன அடியாக குறைத்துள்ளனர்.

தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஏமப்பேர் வாய்க்காலில் தண்ணீர் பெருக்கடுத்து வாய்க்காலின் கரைப் பகுதிகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பசுங்காயமங்கலம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூடுதல் தண்ணீர் திறந்ததால் குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாத வகையில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 103

0

0