வகுப்பறையில் மாணவிகளுக்கு கேக் ஊட்டிய ஆசிரியர்? குமரியில் பரவும் வீடியோ : சமூக ஆர்வலர்கள் கிளப்பிய சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 4:52 pm
Class Cake Cuttting -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் அரசு மகளிர் பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் கேக் ஊட்டினாரா?? சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயகுமார் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுடன் வகுப்பறையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

கேக் வெட்டி கையில் எடுத்த ஒரு துண்டை வழங்க தயாராகும்போது அந்த வீடியோ காட்சி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வகுப்பறையில் ஆண் ஆசிரியர் ஒருவர் தன்னந்தனியாக மாணவிகளோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தலைமை ஆசிரியர் அல்லது சக ஆசிரியர்களுக்கு தெரிவிக்காமல் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக ஆசிரியர் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்றும் தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மகளிர் பள்ளி மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களே பயிற்றுவிக்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரான ஜெயக்குமாரிடம் கேட்டபோது, இதுபோன்ற சம்பவங்கள் வகுப்பறைகளில் சகஜம்தான் எனவும் மாணவிகளே ஏற்பாடு செய்த நிகழ்ச்சி எனவும் குறிப்பிட்டார்.

Views: - 617

0

0