பிரிந்து போன மனைவி, தொடர்பை துண்டித்த காதலி : மன வேதனையில் ஹோட்டல் மேனேஜர் எடுத்த விபரீத முடிவு…

Author: kavin kumar
17 February 2022, 8:01 pm
Quick Share

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறு நபருடன் திருமணமானதால் மனம் உடைத்த ஹோட்டல் மேனேஜர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலைக்குளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரியாஸை விட்டு அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து ரியாஸ் பெங்களூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வந்த, இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வேலை தேடி வந்துள்ளார்.

இந்நிலையில் ரியாஸ் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணமானதால் ரியாஸ் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், ரியாஸ் நேற்றிரவு தனது உறவினர் நிஷாத் என்பவருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் காதலித்த பெண் வேறு நபரை திருமணம் செய்துகொண்டதால் என்னால் வாழ முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் நிஷாத், ரியாஸை சமாதானப்படுத்தியுள்ளார். இதையடுத்து வீடியோ காலில் பேசியபடியே ரியாஸ் ஃபேனில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கியிருக்கிறார். இதையடுத்து அவரது உறவினர் செய்வதறியாது திகைத்து நிற்கையில் ரியாஸின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.ஆனாலும் நிஷாத் தொடர்ந்து செல்போனில் அழைத்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் இருந்தவர்கள் நீண்ட நேரமாக செல்போன் அடித்துக் கொண்டிருந்ததால் அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது ரியாஸ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரியாஸை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 449

0

0