தீரன் சின்னமலையின் வீர வரலாறு

2 August 2020, 10:10 pm
Quick Share

வெள்ளையருக்கு எதிரான விடுதலைப் போரில் – முதன் முதலில் வீர முகம் காட்டிய வேங்கைகள் தமிழர்கள்தாம்.
வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோர் வரிசையிலே அதிமுக்கிய இடம் நமது தீரன் சின்னமலைக்குத்தான். பிறப்பாலே பேரரசு வம்சத்தில் பிறப்பெடுக்கா விட்டாலும் – சிறு வயதிலேயே சிந்தை முழுதும் வீரத்தை விளைய வைத்த விவேகிதான் சின்னமலை.

அவரது அசல் பெயர் தீர்த்தகிரி கவுண்டர், அப்போது அவரது பகுதி மைசூர் சுல்தான் ஹைதர் அலி வசமிருந்தது. ஹைதர் அலிக்குக் கப்பம் கட்டுவதற்காக பொற்காசுகளை மூட்டை கட்டி மைசூர் வீரர்கள் எடுத்துச் சென்றபோது அங்கு நண்பர்களுடன் வேட்டைக்கு வந்திருந்த சின்னமலை அவர்களைத் தாக்கி அந்த செல்வத்தைப் பறித்து ஏழை மக்களுக்கு பிரித்துத் தந்தார். அந்த மைசூர் வீரர்கள் தங்கள் மகாராஜாவிடம் போய் இதை எப்படி சொல்வது என்று கேட்டதற்கு – “சென்னி மலைக்கும் சிவன் மலைக்கும் இடையே ஒரு சின்னமலை எடுத்துக் கொண்டான் என்று சொல்” என்று கூறி அனுப்பி வைத்தாராம்!

அதுமுதல் அவர் தீரன் சின்னமலையாக புதிய பரிமாணம் எடுத்தார்.  திப்பு சுல்தானோடு கூட்டணி கண்டு பிரிட்டிஷாரை பிழிந்து பிழிந்து பிளந்து கட்டினார். ஆங்கிலேய அபாயத்தை அன்றே கண்டு கொண்டவர் தீரன் சின்னமலை. அன்றே வெகுண்டெழுந்தவர் தீரன் சின்னமலை. அன்றே ஆங்கிலேய எதிர்ப்புக்கு அடிக்கல் நாட்டியவர் தீரன் சின்னமலை. வரலாற்றைப் படிப்போர் சிலர், வரலாற்றில் இடம்பெற்றோர் சிலர், வரலாற்றில் வாழ்வோர் சிலர், ஆனால் தீரன் சின்னமலை வரலாறாகவே வாழ்ந்தவர். கேரளத்திற்கும், கொங்கு மண்டலத்திற்கும் இடையே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு பெருத்த இடையூறாக இருந்தார் தீரன் சின்னமலை.

திப்பு சுல்தானின் நட்பைப் பெற்று அவரோடு சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தார். தீரன் சின்னமலை அவர்களின் படை “கொங்கு சேனை” என்று அழைக்கப்பட்டது. அப்போதைய போர்களில் தீரன் சின்னமலை பிரிட்டிஷாரை எதிர்த்துப் பெற்ற வெற்றிகள் ஏராளம். சித்தேஸ்வரம் போர், மழவல்லிப் போர், சீரங்கப் பட்டினம் போர் போன்ற யுத்தங்களில் தீரன் சின்னமலை காட்டிய திறமை மிகுந்த வீரத்தால் வெள்ளையர் படை வேட்டையாடப் பட்டது. குறிப்பாக மழவல்லிப் போரில் நாற்பதாயிரம் வீரர்களோடு யுத்தத்திற்கு வந்த ஆங்கிலப் படையை வெறும் பத்தாயிரம் வீரர்கள் கொண்ட சிறு படையை வைத்துக் கொண்டு அழித்து ஒழித்தார் தீரன் சின்னமலை.

“தீரன் சின்னமலை இருக்கும் திசைப் பக்கம் கூட திரும்பாதீர்கள்” என்று வெள்ளையருக்கு ஆங்கில மேலிடம் உதட்டு மொழி உத்தரவு இட்டிருந்தது. கிபி 1799ல் திப்பு சுல்தான் மரணமடைந்தவுடன் ஓடாநிலையில் கோட்டை கட்டி வெள்ளையர் எதிர்ப்பைத் தொடர்ந்தார் தீரன் சின்னமலை. அவரது ஊரான ஓடாநிலையில் ஆயுதத் தொழிலகத்தை ஆரம்பித்தார். பீரங்கித் தயாரிப்பை நிகழ்த்திக் காட்டினார். தீரன் சின்னமலையை யுத்தத்தில் வெல்ல முடியாது என்று திட்டவட்டமாக தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் மேலிடம், அவரை சூழ்ச்சியின் மூலம் வெல்ல திட்டம் தீட்டியது. அதேபோல் தீரன் சின்னமலையின் சமையல் காரரான நல்லையன் என்பவரைப் பணத்துக்கு அடிமையாக்கி அவர் மூலம் சின்னமலையை சிறைபிடித்தது பிரிட்டிஷ் ராணுவம்.

சங்ககிரி கோட்டையில் தனது 49வது வயதில் தூக்கிலிடப்பட்டார் தீரன் சின்னமலை. கவிஞர்களை வாழ வைத்தவர், கலைஞர்களை கௌரவித்தவர், ஆயுதத் தயாரிப்பில் அசர வைத்தவர், அகில இந்தியாவுக்கும் அடையாளம் தந்தவர், அந்த மாபெரும் வீரருக்கு ஓடாநிலையில் மணிமண்டபம், சென்னையில் ஒரு சிலை, சிறப்பு அஞ்சல் தலை போன்ற கௌரவங்களை அரசு வழங்கியது. ஆனால், பிரிட்டிஷ் அரசும், பிரிட்டிஷ் அரசிடமிருந்து பிச்சை பெற்ற சில தமிழ் எழுத்தாளர்களும் தீரன் சின்னமலையை அவமானப் படுத்தினார்கள். இருந்தாலும் கூட தமிழ் மக்கள் தங்கள் தலைவனாக தீரன் சின்னமலை அவர்களைத் தரித்துக் கொண்டார்கள்.

குறிப்பாக ஆடிப்பெருக்கு அன்று தீரன் சின்னமலையின் உயிர் ஜோதி அணைந்து போனதால் அந்த நாளை தீரன் சின்னமலையின் நினைவுநாளாகக் கொங்கு மண்டலம் கொண்டாடும். இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்தும் முடங்கி விட்டதால், ஒவ்வொரு தமிழரின் இதயமும் தீரன் சின்னமலை அவர்களின் நினைவைக் கொண்டாடும் விழா மேடைகளாகி விட்டன. வாழ்க தீரன் சின்னமலை அவர்களின் புகழ்!

Views: - 42

0

0