திருமணமானவருடன் ஊர் சுற்றிய மகள்.! சொல்பேச்சு கேட்காததால் கொலை செய்த தந்தை.!!

14 August 2020, 11:14 am
Father Kills Daughter - Updatenews360
Quick Share

தேனி : ஆண்டிபட்டியில் ஏற்கனவே திருமணமானவரை காதலித்த மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நாடார் தெருவில் வசித்து வருபவர் முருகன்(வயது 45). ஐஸ் கம்பெனி நடத்தி வரும் இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். அவரது மகள் பெயர் தவமணி (வயது 21). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தவமணி அதேபகுதியை சேர்ந்த திருமணமான ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் தெரிந்தவுடன் தவமணியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தவமணிக்கு திருமண ஏற்பாடும் செய்துள்ளனர். ஆனால் தவமணி திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தவமணி, தந்தை என்றும் பாராமல் முருகனை கட்டையால் தாக்கி உள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆத்திரமடைந்த முருகன் தவமணி தூங்கிக் கொண்டிருந்த போது சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக தெரிகிறது.

மேலும் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி,உறவினர்கள் உதவியுடன் தவமணியின் உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதுகுறித்து தனிப்பிரிவு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்ரீ நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் முருகனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து முருகன் மீது வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல்துறையினர் முருகனை கைது செய்து,இறந்த தவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமானவரை காதலித்ததால் பெற்ற மகளை தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 10

0

0