கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாக்குச்சாவடி மையங்களே இல்லை : ஆட்சியர் தகவல்!!

2 March 2021, 7:37 pm
Cbe Collector -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாக்குச்சாவடி மையங்கள் இல்லை என்றும் இருந்த போதிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 788 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : தேர்தல் ஆணையத்தால் கடந்த 26ம் தேதி முறையாக தேர்தல் அட்டவணை வெளியிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகப்பாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தேர்தல் அலுவலர் உதவி தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர் மற்றும் புறநகரில் அரசியல் கட்சியின் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன விடுபட்ட மற்ற விளம்பரங்களும் இன்று இரவுக்குள் அகற்ற தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்தப்படும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம்.

கோவையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 64 ஆயிரத்து 650 பேர் இருக்கின்றனர். 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தபால் மூலமாக வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருப்பத்தை இப்போது முதலே வழங்கலாம். 12ம் தேதியில் இருந்து 17 ம் தேதிக்குள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் கோவை மாவட்டத்தில் 3048 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கொரோனா அச்சுறுத்தலால், 1050 வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குசாவடிகளை பிரித்து கூடுதல் வாக்குசாவடி மையங்கள் அமைக்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, 1085 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளன. மொத்தமாக 4ஆயிரத்து 467 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

கோவையில் 788 வாக்குசாவடி மையங்கள் பதட்டமாம வாக்குசாவடிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை மாநகராட்சி பகுதிக்குள் வருகின்றன.

கோவையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடிய மையங்கள் இல்லை என்ற போதிலும் கூடுதலான பூத்கள், அதிக வாக்களர்கள் வரும் மையங்கள் தான் பதட்டமான வாக்குச்சாவடி மையமாக கணக்கிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சந்தேகங்கள் கேட்க, புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது 24 மணி நேரம் செயல்படும். 18004254757 அல்லது 1950 என்ற எண்களில் அழைக்கலாம். மேலும், தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்.

இதுவரை 85 புகார்கள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பான கோரிக்கைகள் கிடைத்துள்ளன. நடத்தை விதி மீறல்கள் தொடர்பான 15 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

விதி மீறல்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுப்போம். புகார் அளிப்பவர்களுக்கு தேவைப்பட்டால் முறையான பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துச் செல்பவர்கள் முறையான ஆவணத்தை எடுத்துச் செல்லவும், தங்க நகை தொழிலாளர்கள் திருமண மண்டப நிர்வாகிகளை அழைத்தும் கூட்டம் நடத்த உள்ளோம். அதேபோல எந்த டாஸ்மாக் கடைகளில் வழக்கத்திற்கு மாறாக விற்பனை நடைபெறுகிறது என்பதை அறிந்து அந்த கடையை முழுமையாக கண்காணிக்க உள்ளோம், மொத்த கொள்முதலுக்கு அனுமதி இல்லை.

கேரள மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. கோவையின் எல்லைகளில் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் வருகின்றன. எனவே அந்த மாவட்ட அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளோம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 13

0

0