அமித்ஷா தமிழகம் வருவது ஒரு செய்தியே கிடையாது: சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி

19 November 2020, 10:33 pm
Quick Share

திருச்சி: மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா தமிழகம் வருவது ஒரு செய்தியே கிடையாது என சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிந்துவிட்டது. அதனுடைய முடிவுகளை வெளிப்படையாக வெளியிட முடியாது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் வழங்கப்பட்டு உள்ளது. தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது எந்தெந்த தொகுதியில் எங்களுக்கு செல்வாக்கு உள்ளது என்பதை கண்டறிவதற்காக இந்த சர்வே நடத்தப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அது சர்வே மூலம் தெளிவாக தெரிகிறது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் பட்டியலில் உண்மை தன்மை இல்லை. அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையும் இன்னும் நடைபெறவில்லை. கூட்டணியில் இன்னும் கட்சிகள் சேர வாய்ப்பு உள்ளது. கூட்டணிக்கு எது நல்லதோ? அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதி எண்ணிக்கை முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவது தான் முக்கியம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அடிப்படையில் பார்த்தால் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்களும் இந்த முறை வளர்ந்திருக்கிறோம்.

மருத்துவ கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக வரவேற்கிறேன். நீட் தேர்வுக்கு முன்பு அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் வாய்ப்பு கிடைத்தது என்று நினைப்பது தவறான விஷயமாகும். நீட் தேர்வுக்கு முன்பு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரிய அளவில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கவில்லை. 12 வருடங்களில் 74 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயின்று உள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள் தான் அதிக அளவில் மருத்துவக் கல்வியில் சேர்ந்தனர். நீட் தேர்வு வந்த பின்னர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. தற்போதைய 7.5 சதவீத இட ஒதுக்கீடு வந்த பிறகுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது அதிமுக மட்டுமின்றி கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது உள்ளூர் மக்களின் கருத்துக்களை அறிந்து செயல்படுத்த வேண்டும். இல்லையென்றால் மக்கள் போராட்டம் நடைபெறும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா தமிழகம் வருவது ஒரு செய்தியே கிடையாது. அவர் வருகை என்பது இயல்பான விஷயம். அனைத்து மாநிலங்களுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். இது வாடிக்கையான விஷயம். 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை என்பதை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது.

அந்த படுகொலை சம்பவத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் விடுதலை என்பதை சட்ட ரீதியாகத்தான் செயல்படுத்த வேண்டும். சட்ட ரீதியான முடிவுகளை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். திருச்சியை சேர்ந்த வாசன் மருத்துவ குழு தலைவர் அருண் மரணம் வருத்தம் அளிக்க கூடியதாகும். இதில் சர்ச்சை இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றார்.

Views: - 0

0

0