கத்தி, கடப்பாறையுடன் வங்கிக்கு வந்த கும்பல்.. காவலாளியை தாக்கி கழிவறையில் கட்டி வைத்து கொள்ளை முயற்சி..!!

Author: Babu Lakshmanan
31 October 2022, 10:01 pm
Quick Share

சாலவாக்கம் அருகே பாதுகாவலரை கடுமையாக தாக்கி கழிவறையில் அடைத்து வைத்து விட்டு, வங்கியில் மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியில் அதிகமான கல்குவாரிகள் உள்ளதால் இந்த வங்கியில் பணவர்த்தனை அதிகமாக காணப்படும். இந்நிலையில் இன்று விடியற்காலை சுமார் 2.30 மணி அளவில் சில மர்ம நபர்கள் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கையில் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர்.

வங்கியின் இரவு பாதுகாவலர் கரும்பாக்கம் அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த ஆபேல் (வயது 65) என்பவர் சற்று தூக்க கலக்கத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்மகும்பல் அவரை கட்டையால் சராசரியாக தாக்கியது. இதில் நிலை குலைந்து போன ஆபேலை தூக்கி நைலான் கயிற்றால் கட்டி அருகே உள்ள கழிவறையில் வைத்து அடைத்து விட்டனர்.

பின்னர், கடப்பாறை உள்ளிட்ட பொருட்களுடன் வங்கியின் பின்புறம் சென்று வங்கியின் சுவற்றை இடிக்க பெரும்பாடு பட்டனர். வங்கியின் சுவர் பழைய கால கட்டிடம் என்பதால் அதை இடிக்க கொள்ளையர்கள் பல முயற்சிகளை கையாண்டனர். வங்கியின் சுவற்றில் ஒரு ஆள் அளவுக்காவது துளை போட்டு உள்ளே செல்லலாம் என முயற்சி செய்த கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அவர்கள் வெறுங்கையுடன் அங்கிருந்து தப்பினர்.

இன்று விடியற்காலை 5 மணி அளவில் கழிவறையில் அடைக்கப்பட்டிருந்த ஆபேல் அவர்களை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலவாக்கம் காவல் துறையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியன் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Views: - 241

0

0