காதல் கணவன் மர்ம மரணம் : மனைவிக்கே தெரியாமல் சடலம் எரிப்பு… கைக்குழந்தையுடன் நீதிக்காக போராடும் பெண்…!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 7:38 pm
thiruvallur death - updatenews360
Quick Share

திருவள்ளூர் : ஆரணி அருகே கலப்பு திருமணம் செய்த காதல் கணவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், ஆணவ கொலை செய்திருப்பதாக காவல் நிலையத்தில் கைக்குழந்தையுடன் மனைவி புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அயநெல்லூர் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகள் அமுல். இவர் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். ரயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு செல்லும் போது, இவருக்கும் ஆரணியை அடுத்த காரணி கிராமத்தில் வசித்து வந்த வேறு சமூகத்தை சேர்ந்த கௌதம் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இதனை தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு கௌதம் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரண்டு வருடங்களாக சென்னையில் வசித்து வந்த காலத்தில் வார விடுமுறை நாளில் மட்டும் கௌதம் தமது தந்தை வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் பிரசவத்திற்காக தமது அக்கா ஊரான ஆவூரில் அமுலும், கௌதமும் குடி பெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த 17ம் தேதி கௌதமின் உறவினர் இறந்து விட்டதாக வந்த தகவலின் பேரில், காரணியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்ற கௌதம் வீடு திரும்பவில்லை. அமுல் தனது கணவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போதும் பேச முடியாமல் போனது. இதனால் சந்தேகமடைந்த அமுலின் உறவினர்கள் கௌதமின் ஊருக்கு சென்ற போது கௌதம் இறந்துவிட்டதாக அங்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அமுல் ஒரு மாதமே நிரம்பிய தனது கைக்குழந்தையுடன் தனது கணவரின் மரணத்தை தன்னிடம் மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் கணவரின் மரணத்தை மனைவிக்கு தகவல் கொடுக்காமல் அவரது சடலத்தை எரித்துள்ளதால், கவுதம் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது கணவரை ஆணவ கொலை செய்து தடையங்களை மறைப்பதற்காக, தனக்கு தகவல் கொடுக்காமல், அவசர அவசரமாக கவுதமின் சடலத்தை அவருடைய உறவினர்கள் எரித்து விட்டதாக அமுல் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால், கவுதம் ஆணவ கொலை புகார் குறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 255

0

0