‘வண்டியில மாமன் பொண்ணு’… திருமணம் முடிந்து ரேக்ளா வண்டியில் பயணித்த மணமக்கள் : மலர்தூவி வரவேற்ற நண்பர்கள்!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 10:03 pm
Quick Share

திருவள்ளூர் : வாடகைக்கு பென்ஸ், ஜாக்குவார் ஆகிய கார்களை எடுத்து ஊர்வலம் சென்று பந்தா காட்டி திருமணம் செய்யும் பலருக்கு மத்தியில் பாரம்பரியம் மறக்காமல் ரேக்ளா வண்டியில் சென்ற மணமக்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கிராமங்களில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் தங்களின் வீட்டிலும், தோட்டத்திலும் மாடுகள், ஆடுகள், கோழி ஆகியவைகளை தங்கள் பிள்ளைகளோடு, பிள்ளைகளாக பாசத்தோடு வளர்த்து வருவது வழக்கம்.

சென்னை புறநகர் பகுதிகளில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பெரும் அளவில் தற்போது விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் பெருமளவில் புறநகர் பகுதியில் வளர்ச்சி அடைந்து வருகிறது. குடியிருப்புகளும், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அதிக வளர்ச்சி அடையும் நிலையில், ஒரு சில விவசாயிகள் மட்டும் இன்றளவும் சிறிய அளவிலான விவசாயம் செய்து வருகின்றனர்.

அதேபோல், தங்கள் வீடுகளில் இன்றளவும் மாடு, ஆடுகளை வளர்த்து வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் -கண்ணகி. இவர்களது மகன் விஜய், ஆனந்தன் – மேரி ஆகியோரின் மகள் ரம்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குலதெய்வம் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

மணமக்கள் வீடு திரும்பும் பொழுது தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்களின் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட ரேக்ளா வண்டியில் மணமகன் விஜய், மணமகள் ரம்யாவை ஏற்றிக்கொண்டு உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ ரேக்ளா வண்டியை ஓட்டிச் சென்றார்.

அப்பொழுது, உறவினர்களும், நண்பர்களும் ஆனந்தமாக மகிழ்ச்சி அடைந்து மணமக்கள் மீது மலர்களை தூவி வாழ்த்தியவரே சென்றனர்.

இதை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள், வாடகைக்கு பென்ஸ், ஜாக்குவார் கார்களை எடுத்து ஊர்வலமாக சென்று, பந்தா காட்டி திருமணத்தை நடத்தும் பலர் மத்தியில் பாரம்பரியத்தை மறக்காமல் ரேக்ளா மாட்டு வண்டியில் சென்ற மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியதோடு, புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.

Views: - 116

0

0