‘என்னை விட்டு உயிர் போனாலும்’… பிரிய மனமில்லாத கல்லூரி தோழிகள் ; 3 மாவட்ட போலீஸாருக்கு சவாலாக இருந்த அன்பு..!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 9:44 am
Quick Share

தூத்துக்குடி ; அதீத அன்பினால் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகளின் விபரீத முடிவு, இரு வீட்டாரின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளான பண்டாரபுரத்தை சேர்ந்த கார்த்திகா மற்றும் கொழுந்தட்டு பகுதியை சேர்ந்த எப்சிபா ஆகிய இரண்டு மாணவிகளும் ஒரே வகுப்பறையில் படித்து வருகின்றனர்.

கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 10 நாட்கள் மாணவிகள் வீட்டிலிருந்து படிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவிகள் எப்சிபா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணைபிரியாத தோழியாக இருந்த நிலையில், இந்த 10 நாட்கள் இருவரும் பிரிந்து இருக்க மனமில்லாமல் இருந்துள்ளனர்.

இந்த 10 நாட்களும் தாங்கள் வீட்டை விட்டு வேறு எங்காவது சென்று வேலை தேடி அங்கு பணியில் சேரலாம் என எண்ணி, இருவரும் கடந்த 23ஆம் தேதி தங்களது வீடுகளில் கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக வங்கிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர்.

வீட்டிலிருந்து சென்று வெகு நேரமாகியும் மாணவிகள் தங்களது வீட்டுக்கு வராததால் கல்லூரியை தொடர்பு கொண்டு அவரது பெற்றோர்கள் கேட்டுள்ளனர். அப்போது, கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை எனவும், தற்போது கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறிய நிலையில், அதிர்ந்து போன பெற்றோர்கள், இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை குழுவினர், மாணவிகள் காணாமல் போன அன்றைய தினம் சாத்தான்குளம் நகர் முழுவதும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை ஆய்வு செய்த போது அந்த மாணவிகள் இருவரும் வங்கி அருகே நடந்து செல்வது போல உள்ள காட்சி பதிவாகி இருந்தது.

மேலும் மாணவிகளின் செல்போன் லொகேஷனை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரு மாணவிகளில் ஒரு மாணவியின் செல்போன் எண் திருச்சியில் இருப்பதாக லொகேஷன் காண்பித்துள்ளது.

அதன் பேரில் தனிப்படை போலீசார் திருச்சிக்கு விசாரணைக்காக சென்றனர். அப்போது தனிப்படை போலீசார் திருச்சிக்கு செல்வதற்கு முன்னரே மாணவியின் அதே செல்போன் எண் திருநெல்வேலி நோக்கி வருவதாக அறிந்து, மீண்டும் திருநெல்வேலிக்கு நோக்கி வந்தனர். அதன் பின்னர் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு மாணவிகளின் பெற்றோரும் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமாரிடமும் இரு மாணவிகள் காணாமல் போன விவகாரம் குறித்து புகார் அளித்தனர். இது குறித்து டிஐஜி பிரவேஷ்குமாரும் நேரடியாக விசாரணை நடத்தி வந்தார். இதனால் கடந்த ஒரு வார காலமாக திருச்சி, மதுரை, கோவில்பட்டி, உள்ளிட்ட இடங்களில் தனிப்படை போலீஸ் குழுவினர் மாணவிகள் இருக்கும் இடம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், நேற்று இரவு அந்த மாணவிகள் மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக கண்டறிந்த பயிற்சி எஸ்ஐ வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த விடுதிக்கு சென்று காணாமல் போன இரு மாணவிகளையும் மீட்டு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணியளவில் அளவில் அழைத்து வந்தனர்.

அங்கு சாத்தான்குளம் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பெண் காவலர்கள் அந்த மாணவிக்கு உரிய அறிவுரை கூறி அவர்களின் பெற்றோரிடத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 344

0

0